Friday, December 20, 2013

என்னை விட்டு போகாதே...! பகுதி 50: இறுதி பகுதி:-

அவள் இப்படி சொல்லவும் மலர் மகிழ்ந்து தான் போனாள். ஏதோ அவளே தனது காதலில் வென்றது போல. மலரின் முகத்தில் தோன்றிய உற்சாகத்தை பார்த்து புன்னகைத்துவிட்டு தன் கைப்பேசியை எடுத்து கண்ணனிற்கான குறுஞ்செய்தியை எழுதி அனுப்பினாள் கவியரசி.

அங்கே பூங்காவில் தன்னிலை மறந்து பிதற்றி கொண்டிருந்த கண்ணனை சென்றடைந்தது அது. அவன் தனது கைப்பேசியை எடுத்தான். அந்த செய்தியை படித்தான். "நாளை மாலை பூங்காவில் அவசியம் உன்னை சந்திக்க வேண்டும்" முதல் வரியை படித்ததும் அவனது இதழில் தோன்றிய புன்னகை மெல்ல அகன்றது அவன் அந்த செய்தியை தொடர்ந்து படித்த போது.

மறுநாலைய பொழுதிற்காக ஏங்கி கொண்டிருந்த அவனது மனதில் சிறிய அச்சம் ஆட்கொண்டது. அவளது பதில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் தோன்றிய அச்சமாக இருக்க வேண்டும் அது.

மறுநாள் காலை விடிந்தது, அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கின்ற உறவின் நிலையை தீர்மானிக்க போகும் நாள் அது என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் அது இன்பமான ஒன்றா அல்லது வலிகள் நிறைந்ததா என்பதை காலம் மட்டுமே அறியும்.

அன்று மாலை வழக்கம் போல் பூங்கா மேடையில் ஒரு இதயம் மற்றொரு இதயத்திற்காக காத்திருந்தது. இந்த முறை காத்திருந்தது கண்ணன். அவனது மனதில் இருந்த நடுக்கம் அவனை மதிய வேளையே அங்கு கொண்டுவந்து சேர்த்திருந்தது.

கவியரசியின் வருகையை உணர்த்தியது அவளது கொலுசொலி. அவன் அருகில் வந்து அமர்ந்தாள் அவள். அவள் பக்கம் திரும்பினான் அவன். அவன் மனத்திரையில் ஓடி மறைந்தது அவள் அனுப்பிய குறுஞ்செய்தியின் இறுதி வரி. "என் திருமணத்தை பற்றி உன்னிடம் பேச வேண்டும். அப்பா எனக்காக ஒரு மாப்பிள்ளை பார்த்துள்ளார். அவசியம் வந்துவிடு" என்ற அந்த வரிகள் அவனுக்கு வலியை அன்றி வேறு எதனை பரிசாய் தந்திருக்க முடியும்.

"என்ன கண்ணா மௌனமாகவே இருக்கிறாய்? ஏதும் கேட்க மாட்டாயா?" என்றாள் அவள். "என்ன கேட்பது கவி. என்னை எப்படி மறந்தாய் என்றா. இதே கேள்வியை நான் முன்பு ஒரு முறை கேட்டிருக்கிறேன். அதன் அர்த்தமும் இன்று நான் அப்படி கேட்டால் அதன் அர்த்தமும் வேறாக இருக்காதா?" மனதுக்குள் நினைத்தவன் "இல்லை கவி.சொல், உனக்காக உன் தந்தை பார்த்திருக்கும் மணமகனை பற்றி" என்றான் வலியை தன் மனதோடு புதைத்து கொண்டு.

"அவர் பெயர் மதி. எங்களது தூரத்து உறவு. அவர் எனது பள்ளி தோழனும் கூட. அன்று எல்லாம் நான் நினைத்ததில்லை அவரே என் வாழ்க்கையின் பாதியாய் ஆவார் என்று" சொல்லிவிட்டு அவனது விழிகளை பார்க்க மறுத்து மறு பக்கம் தனது தலையை திருப்பி கொண்டாள் அவள்.

"உன் பள்ளி கால தோழனா? அவனால் என்னை விட அதிகமாய் உன்னை நேசிக்க முடியுமா? அளவற்ற காதலை உனக்கு அளிக்க முடியுமா?" ஏனோ அவனது இதழ்களுக்கு இந்த கேள்வியை கேட்கும் திறன் இல்லாமல் போய்விட்டது. "உனக்கு அவனை பிடித்திருக்கிறதா?" என்றான்.

"பிடித்திருக்கிறது கண்ணா. தோழன் ஒருவன் வாழ்க்கை துணையாய் வருவதை எந்த பெண்ணும் விரும்ப தானே செய்வாள். அடுத்த மாதம் நிச்சயதார்த்தம், ஆறு மாதத்தில் திருமணம்" அவளது இந்த வரிகள் அவனை எத்தனை அளவு காயப்படுத்தி இருந்தால் அவனது கண்களின் ஓரம் அவனையும் அறியாமல் கண்ணீர் துளிகள் எட்டி பார்த்திருக்கும். அதை அவள் காணும் முன்னர் வேகமாய் தன் தலையை மறு பக்கம் திருப்பியவாறே அந்த துளிகளை துடைத்து கொண்டான்.

"தேவி என்ன சொன்னாள்? உங்களுக்குள் எல்லாம் நலம் தானே. உன் காதலை உன் அம்மாவிடம் சொல்லி நீயும் என் போல கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் கண்ணா" அவள் பேச பேச அவனது மனம் கண்ணீர் அன்றி உதிரத்தை சிந்திவிட கூடாதா என்றே எண்ணியது.

"என் வாழ்வில் இருக்க வேண்டியவள் இன்று இல்லை கவி. அவள் தனது வழியில் செல்ல முடிவெடுத்துவிட்டாள்" அவன் சொல்ல அவனை புதிராய் பார்த்தாள் அவள். அவளது புருவங்கள் கேள்வி குறிகள் போல் வளைந்தன.

"என்னை விடு கவி. என் வாழ்வில் இதனால் ஏற்பட போகும் மாற்றங்கள் நானே அறியாத ஒன்று தான். அதை பற்றி சிந்திக்கும் நிலையில் நான் இப்போது இல்லை" என்றவன் அந்த இடத்தை விட்டு செல்ல முடிவு செய்து அந்த மேடையில் இருந்து எழுந்து நடந்தான்.

அவன் மனதில் ஆயிரம் கேள்விகள். ஏன் இத்தனை வலிகள் அவனுள். இதை எல்லாம் எதிர்த்து நின்றவன் தைரியத்தை வரவழைத்து கொண்டு அவள் பக்கம் திரும்பினான். "கவி உன்னிடம் நான் சொல்ல வேண்டியது ஒன்று தான்...." அவன் சொல்லியதை கேட்ட போது அவளது மனதிலும் வலி நிரம்ப தொடங்கியது.

ஆறு மாதங்களுக்கு பின்,

அவன் இரெயிலில் அமர்ந்திருந்தான். இன்று அவளுக்கு திருமணம். ஆம் அவன் பெரிதாய் நேசித்த கவிக்கு தான். இனி அவளை கவி என்று அழைக்கும் உரிமை அவனிடத்து இருக்க போவதில்லை.

அன்று அவர்களின் இறுதி சந்திப்பில் அவனால் தைரியத்தை வரவழைத்து கொண்டு அவளிடம் சொல்ல முடிந்தது இதை தான் "உன் திருமண வாழ்க்கைக்கு எனது வாழ்த்துக்கள்".

ஆனால் இன்று அவள் அருகில் வேறு ஒருவன் அமர போவதை காணும் துணிவு அவனிடம் இல்லை. அதனால் தான் அவன் டெல்லிக்கு புறப்பட்டு விட்டான். ஆம், முன்பு அவனுக்காக அவனது மாமா பார்த்து வைத்திருந்த அதே வேலைக்காக தான். அவனது கைப்பேசியை கையில் எடுத்தான். அவளுடம் இனி பேசிடும் அளவு அவன் மனதில் வலிமை இருக்குமா என்ற ஐயம் அவனுக்கு.

குழப்பம் நிறைந்த அவன் மனதை வென்றது அவனது அச்சம். அவன் கைப்பேசியில் இருந்த சிம்மை எடுத்து வெளியில் வீசி எறிந்தான்.அங்கே அவளது திருமணம் நடந்தேரியாது. இரெயில் நகர தொடங்கியது. அவனது வாழ்க்கையும் தான், அவள் நினைவுகள் தரும் சுகங்களையும் வலிகளையும் சுமந்தபடி.

------> சொல்ல படாத காதலும் கொலையாளியின் ஆயுதமும் ஒன்று தான், இரண்டும் தருகின்ற வலி கொடுமையானது.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> நன்றி <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

Thursday, December 19, 2013

என்னை விட்டு போகாதே...! பகுதி 49

"சரி கண்ணா. உன் காதல் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்" என்று  சொல்லிவிட்டு விலகி சென்றவளை பார்த்தவண்ணம் இருந்தான் அவன். அவளை காயப்படுத்திய உணர்வு இருந்தும், மனதில் ஒரு வித நிம்மதியோடு அவனும் கவியும் வழக்கமாய் அமரும் அந்த மேடையின் மீது சென்று அமர்ந்தான்.

"நாளை இதே மேடையில் நானும் கவியும் அமர்ந்திருப்போம். மரங்களே, நீங்கள் கவலை பட வேண்டாம். இனியும் அவளிடம் நான் என் காதலை மறைக்க போவதில்லை. நாளை உங்கள் முன்பு அவளிடம் நான் என் காதலை சொல்ல போகிறேன்" பித்து பிடித்தவன் போல் மரங்களிடம் உரையாடினான் அவன்.

அவனும் அவளும் திருமண மேடையில் அமர போகும் நாளை எண்ணி பார்த்தவன் இதழ்களில் தோன்றியது புன்னகை. அவன் தன்னை மறந்து அவளது நினைவில் ஆழ்ந்துவிட்டிருந்தான்.

அதே நேரம் விடுதியில் கவிக்கும் மலருக்குமான உரையாடல் தொடர்ந்த வண்ணம் இருந்தது. "என்ன முடிவு செய்திருக்கிறாய் கவி?" அக்கறையோடு கேட்டாள் மலர்.

"என்ன முடிவு எடுப்பது. என் மனதை எவரோ ஓங்கி அறைந்தது போன்று உணர்கிறேன். யாரும் இல்லாது தனிமையில் விடப்பட்ட மழலை போல இருக்கிறேன். என் மனதோடு இருக்கும் வலியின் அளவை என்னால் சொல்லிட முடியாது. உனக்கு அது புரியும் என்றே நினைக்கிறேன்" என்றவளின் கண்ணீர் மட்டும் வற்றவில்லை.

வலிகளை தாங்கும் உள்ளத்தின் ஒற்றை ஆறுதல் விழிகள் வடிக்கும் கண்ணீர் மட்டுமே. அவளும் அதையே தான் நாடி இருந்தாள் ஆறுதலுக்காக.

"இப்படியே சொல்லி கொண்டிருக்க முடியுமா? நீயாக எந்த முடிவையும் எடுக்காதே. அவனிடம் ஒரு முறை பேசி பார். அவன் மனதிலும் உன் மீது காதல் இருக்கலாம் அல்லவா?" என்ற மலரின் வார்த்தைகள் அவளிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

"பேசுவதில் என்ன பயன்? அவனை நான் நன்கு அறிவேன்" உறுதியாய் சொன்னாள் அவள். பாவம் அவனது மனதை சரியாய் படிக்க முடியாத அவளது இயலாமையை அவளது மனம் அறியவில்லை.

"எனக்காக ஒரு முறை பேசி பார்" என்று மலர் சொல்லி கொண்டிருக்க கவியரசியின் கைபேசி சிணுங்கியது. அழைத்தது அவளது தந்தை. அழைப்பை ஏற்றவள் சில மணி துளிகளுக்கு மௌனமாய் தலை அசைத்தபடி அவளது தந்தை கூறியதை கேட்டு கொண்டிருந்தாள்.

பின் சரி என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தவள் மலரின் கேள்விக்கு பதில் சொல்பவளாய் "நாளை எங்களது சந்திப்பில் இது அத்தனைக்கும் ஒரு முடிவு பிறந்து விடும்" என்றாள்.

என்னை விட்டு போகாதே...! பகுதி 48

அவளது முகம் வாடி போன மலர் போல் காட்சியளித்தது. அவள் விழிகளின் ஓரம் கண்ணீர் துளி தோன்றியிருந்தது. நிராகரித்தல் தருகின்ற வலியினை நன்கு உணர்ந்தவன் அவன். ஆனால் இன்று அவனே அந்த வலியினை அவளுக்கு தரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறான். இதுவும் வாழ்க்கையின் வினோதங்களில் ஒன்று தான்.

"உண்மையாக தான் சொல்கிறாயா கண்ணா?" அழுதபடி அவள் கேட்ட போது அவன் உடைந்து தான் போனான். என் செய்வது, இனியும் அவளிடம் இதை மறைப்பது தேவி கவி இருவருக்கும் அவன் செய்யும் துரோகமாக தோன்றியது அவனுள்.

"ஆம் தேவி. என்னை மன்னித்துவிடு. இது உன்னை எத்துனை அளவு காயப்படுத்தும் என்பதை நான் அறிவேன். ஆனால் உண்மை இது தான்" சொல்லிவிட்டு அவளை எதிர்கொள்ளும் தைரியம் இன்றி தனது தலையை தாழ்த்திகொண்டான் அவன்.

சில மணித்துளிகளுக்கு பேச மறந்து அழுகையை மட்டுமே தனக்கு சொந்தமாக்கி கொண்டாள் அவள். அவனால் அழுதிடவும் முடியவில்லை. மௌனமாகி போனான்.

"அவள் மீது நீ காதல் கொள்ள காரணம் நான் உன் மீது அன்பினை காட்ட மறந்து போனதன் விளைவா? இல்லை உன்னை நான் அதிகம் காயப்படுத்தியதற்கு நீ எனக்கு தரும் தண்டனை இந்த பிரிவா?" கேட்டாள் அவள்.

"இல்லை தேவி. உன் மீது எந்த வித வருத்தமும் இல்லை எனக்கு. உனது பிரிவால் துவண்டு போயிருந்த என் மனதிற்கு காதலின் அர்த்தம் சொல்லி தந்தவள் அவள். என் தாய் போல் அவள் என் மீது காட்டிய அன்பு மட்டுமே நான் அவள் மீது காதல் கொள்ள காரணம். அவளை அன்றி ஒரு பெண்ணை நான் மணப்பது என்பது சாத்தியம் ஆகாது" உறுதியாய் சொன்னான் அவன்.

எதையோ சிந்தித்தவளாய் "கண்ணா. உனக்கு அவள் தான் என்று நீ நினைத்தாள் அதை தடுப்பதற்கு நான் யார். உன் காதலை ஏற்க மறுத்த எனக்கு இந்த வலி வேண்டியது தான். கவியரசி கொடுத்து வைத்தவள்" என்றாள்.

அவளை பார்க்கும் துணிவு அவனிடம் இல்லை. அவள் அவன் அருகில் வந்து அவனை அணைத்து கொண்டாள். சில நிமிடங்களுக்கு அவன் தோள்களில் சாய்ந்து இருந்தவள் அவனை விட்டு விலகி சென்று "இது போதும் எனக்கு. என்னை பற்றி நீ கவலை கொள்ளாதே. கவியிடம் உன் காதலை சொல்லிவிட்டாயா?" கேட்டாள் அவள்.

ஏதோ ஒரு சுமையை இறக்கி வைத்து விட்ட உணர்வில் இருந்தவனை அந்த கேள்வி மீண்டும் சுயநினைவிற்கு கொண்டு வந்தது. "இல்லை தேவி. நாளை தான் சொல்ல போகிறேன்" என்றான் அவன். அவனது மனம் கவியின் மனதில் இருப்பதை அறியாதே.

என்னை விட்டு போகாதே...! பகுதி 47

பூங்காவில்,

"தேவி, உன்னிடம் நான் சொல்ல வேண்டியதை சொல்லும் முன் உன்னிடம் ஒரு கேள்வியினை கேட்க வேண்டும்" என்றான் கண்ணன்.

அவனை ஆச்சரியமாய் பார்த்தவள் "எதுவாக இருந்தாலும் கேளு கண்ணா" என்றாள். "இதுநாள் வரையிலும் உன்னை மட்டுமே என் மனதில் சுமந்து கொண்டிருப்பேன் என்று நினைக்கிறாயா?" கேட்டான் அவன்.

அவன் கேட்ட கேள்வியில் புதைந்திருக்கும் உண்மையை அறியாதவளாய் "கண்டிப்பாக கண்ணா. உன்னால் என்னை தவிர வேறு ஒரு பெண்ணை நினைத்து கூட பார்த்திருக்க முடியாது என்று நம்புகிறேன். நான் உன்னை வெறுத்த போதே என் மீது அதிகமான காதலை காட்டியவனாயிற்றே நீ" என்றாள்.

அங்கே விடுதியில்,

"என்ன கவி, கண்ணனிடம் உனது காதலை சொல்லிவிட்டாயா?" என்று கேட்ட மலரை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அழுதவண்ணமே இருந்தாள் கவியரசி. மலர் விடுவதாய் இல்லை. "சொல் கவி. அவன் பிறந்த நாள் அன்றே அவனிடம் சொல்லிவிடுவதாய் சொன்னாயே. சொல்லி விட்டாயா? அதை அறிந்து கொள்ள நான் அழைத்த போதும் நீ என் அழைப்பை ஏற்கவில்லை. சொல்" என்றாள்.

கவியரசி தனது அழுகையை நிறுத்திவிட்டு பேச தொடங்கினாள். "இல்லை. நான் அவனிடம் என் காதலை சொல்லவில்லை" என்றவளால் அவளது கண்ணீரை அடக்க முடியவில்லை.

"ஏன்? அவனிடம் சொல்கின்ற சூழல் அமையவில்லையா?" ஆறுதல் சொல்லும் குரலில் மலர் கேட்க "இல்லை. அவன் மனதில் என் மீது துளி அளவும் காதல் இல்லை. அவன் தேவியை தான் காதலிக்கிறான் இன்றளவும்" என்று சொல்லிவிட்டு தலையணையில் தன் முகம்புதைத்து மேலும் அழுதாள் அவள். பெண்களின் கண்ணீரை பெரிதும் சுமப்பது அவர்களது தலையணை தான்.

"இல்லை தேவி. உன் நம்பிக்கையை நான் காப்பாற்றவில்லை. நீ என்னுடன் இல்லாத இந்த நான்கு வருடங்களில் எத்தனையோ மாற்றங்கள். காதல் இன்னது என்று எனக்கு புரியவைத்த ஒருத்தியை என் மனம் தானாக விரும்ப தொடங்கிவிட்டது. இப்போது என் மனம் முழுவதும் நிறைந்திருப்பது அவள் மட்டுமே. அவள் பெயர் கவியரசி" என்று கூறிவிட்டு தேவியின் முகத்தை பார்த்தான் கண்ணன்.

Wednesday, December 18, 2013

அன்பு, பாசம், காதல் பற்றறுத்து

அன்பு, பாசம், காதல் பற்றறுத்து
அடைகின்ற இடங்களாய்
துறவறமும் மென்பொருள் நிறுவனமும்
முன்னது ஞானத்திற்காக
பின்னது பணத்திற்காக...!!!

என்னை விட்டு போகாதே...! பகுதி 46

எதையோ வேண்டி அழுது அடம் பிடிக்கும் மழலைக்கு அந்த பொருளை வாங்கி கொடுக்கின்ற பொழுது அதன் குரலில் ஏற்படும் மாற்றம் தான் அவளது குரலிலும் ஏற்பட்டது, அவன் இப்படி கேட்டதும்.

"உன்னை பார்ப்பதை விட முக்கியமான வேலை வேறு என்ன இருக்க முடியும் எனக்கு. உன்னோடு வாழ போகும் நொடிகளுக்காக தானே ஏங்கி கொண்டிருக்கிறேன் கண்ணா" அவள் சொன்னதை கேட்டதும் சிரித்தான்
அவன் வாழ்க்கையின் வினோதத்தை எண்ணி.

இதே வார்த்தைகள் தான் சொல்லப்பட்டன. முன்பு, அவனால் அவளிடம். இன்றோ, அவளால் அவனிடம். ஆனால் இந்த இடைவெளியில் காலம் தனக்கான பங்காய் ஒரு புதிரான நாடகத்தை அரங்கேற்றி விட்டிருந்தது.

"நீ நினைப்பதை போல் உன்னை மகிழ்விக்கும் பதிலை உன்னிடம் நான் சொல்ல போவதில்லை தேவி. உன் மனதை காயப்படுத்த போகும் பதில் தான் என்னிடம் உள்ளது உனக்காக. நீ என் வாழ்வில் மீண்டும் வராமலே போயிருக்கலாம்" மனதுக்குள் சொல்லி கொண்டான் அவன்.

"சரி மாலை பூங்காவில் சந்திக்கலாம்" சொல்லிவிட்டு அவள் அழைப்பை தூண்டிக்க, இன்று எப்படியும் அவளிடம் அனைத்தையும் சொல்லிவிட வேண்டும் என்ற உறுதியோடு கைப்பேசியை வைத்துவிட்டு தனது வீட்டை நோக்கி பயணித்தான் அவன்.

மாலை பொழுது,
கண்ணனுக்காக காத்திருந்தாள் தேவி. அவளது மனம் அடைய போகும் வலியினை அறியாத அவளது இதழ்கள் புன்னகையை உதிர்த்தபடி இருந்தன. அவனது வண்டியின் ஓசை கேட்டதும் அந்த புன்னகை அதிகரித்தது.

அவளது அருகில் வந்து நின்றான் அவன். "வெகு நேரமா ..." அவன் சொல்லி முடிப்பதற்குள் அவன் அருகில் சென்று அவனை அணைத்து கொண்டாள் அவள்.

என்ன செய்வதென்று புரியாதவனாய் அவளை தன்னிடம் இருந்து விலக்கிவிட்டு அவளிடம் அவன் பேச தொடங்கினான். "தேவி, உன்னிடம் நான் ஒன்றை சொல்ல வேண்டும்" என்று அவன் சொன்ன அதே வேளை அங்கே விடுதியில் அழுது கொண்டிருந்த கவியிடம் அவளது தோழி மலர் கேட்டாள் "என்ன நடந்தது" என்று.

Tuesday, December 17, 2013

என்னை விட்டு போகாதே...! பகுதி 45

"என்ன தேவி ஏன் மௌனமாகி விட்டாய். நான் உன்னை காயப்படுத்தி விட்டேனா? என்னை மன்னித்துவிடு" என்றான் அவன்.

"அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை கண்ணா. சரி நீ உன் வேலையை கவனி" என்று சொன்னாள் அவள். அவளது குரலில் அழுகையின் ரேகைகள் இருப்பதை உணர்ந்தான் அவன். நமது மனம் சுமக்கும் சோகத்தை நமக்கு நெருக்கமான உறவுகளிடம் இருந்து மறைப்பது எளிதா என்ன.

அவளது மனதின் சோகத்தை அவன் வாசித்த அந்த நொடிகள் இருவரின் உதடுகளும் பேச மறுத்து ஊமையாகி போயிருந்தன தங்களுக்கு வேலை ஏதும் இல்லை என்பதை உணர்ந்து. கையிலே கைபேசி எந்த உரையாடாலும் இன்றி. அவளது அழுகை ஓசை மட்டும் அதிகரித்தவண்ணம் இருந்தது.

"கண்ணா. என் மீது உனக்கு ஏதேனும் கோபமா? நான் முன்பு உன்னை காயப்படுத்தியது உனது நினைவில் உள்ளதா? இருந்தால் என்னை மன்னித்து விடு. இப்படி விலகி சென்று என்னை தண்டிக்காதே" அழுதவளின் குரல் உடைந்து தான் போனது இந்த வார்த்தைகளை சொன்ன போது.

அவள் அழுவதை அவனால் ஏனோ தாங்கி கொள்ள முடியவில்லை. முதல் காதலை மறப்பது என்பது எளிதல்லவே. அவனை அவள் மதியாத போதிலும் அவளை அதிகம் நேசித்தவன் ஆயிற்றே அவன்.

"இல்லை தேவி. உன் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை" சொன்னவனின் மனம் தொடர்ந்தது "கோபம் எல்லாம் அந்த இயற்கையின் மீதும் என் மீதும் தான்" என்று.

அவள் மனம் ஏனோ அவனது பதிலில் நிம்மதி காணவில்லை "உண்மையாக தான் சொல்கிறாயா? எனக்காக ஏதும் சொல்ல வேண்டாம்" என்றாள் அவள்.

"உண்மையாக தான் சொல்கிறேன்" என்றான் எதையோ சிந்தித்தவனாய். சட்டென்று சொன்னான் " இன்று மாலை நாம் சந்திக்கலாமா. உனக்கு வேலை ஏதும் இல்லையென்றால்" என்று.