Thursday, December 19, 2013

என்னை விட்டு போகாதே...! பகுதி 47

பூங்காவில்,

"தேவி, உன்னிடம் நான் சொல்ல வேண்டியதை சொல்லும் முன் உன்னிடம் ஒரு கேள்வியினை கேட்க வேண்டும்" என்றான் கண்ணன்.

அவனை ஆச்சரியமாய் பார்த்தவள் "எதுவாக இருந்தாலும் கேளு கண்ணா" என்றாள். "இதுநாள் வரையிலும் உன்னை மட்டுமே என் மனதில் சுமந்து கொண்டிருப்பேன் என்று நினைக்கிறாயா?" கேட்டான் அவன்.

அவன் கேட்ட கேள்வியில் புதைந்திருக்கும் உண்மையை அறியாதவளாய் "கண்டிப்பாக கண்ணா. உன்னால் என்னை தவிர வேறு ஒரு பெண்ணை நினைத்து கூட பார்த்திருக்க முடியாது என்று நம்புகிறேன். நான் உன்னை வெறுத்த போதே என் மீது அதிகமான காதலை காட்டியவனாயிற்றே நீ" என்றாள்.

அங்கே விடுதியில்,

"என்ன கவி, கண்ணனிடம் உனது காதலை சொல்லிவிட்டாயா?" என்று கேட்ட மலரை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அழுதவண்ணமே இருந்தாள் கவியரசி. மலர் விடுவதாய் இல்லை. "சொல் கவி. அவன் பிறந்த நாள் அன்றே அவனிடம் சொல்லிவிடுவதாய் சொன்னாயே. சொல்லி விட்டாயா? அதை அறிந்து கொள்ள நான் அழைத்த போதும் நீ என் அழைப்பை ஏற்கவில்லை. சொல்" என்றாள்.

கவியரசி தனது அழுகையை நிறுத்திவிட்டு பேச தொடங்கினாள். "இல்லை. நான் அவனிடம் என் காதலை சொல்லவில்லை" என்றவளால் அவளது கண்ணீரை அடக்க முடியவில்லை.

"ஏன்? அவனிடம் சொல்கின்ற சூழல் அமையவில்லையா?" ஆறுதல் சொல்லும் குரலில் மலர் கேட்க "இல்லை. அவன் மனதில் என் மீது துளி அளவும் காதல் இல்லை. அவன் தேவியை தான் காதலிக்கிறான் இன்றளவும்" என்று சொல்லிவிட்டு தலையணையில் தன் முகம்புதைத்து மேலும் அழுதாள் அவள். பெண்களின் கண்ணீரை பெரிதும் சுமப்பது அவர்களது தலையணை தான்.

"இல்லை தேவி. உன் நம்பிக்கையை நான் காப்பாற்றவில்லை. நீ என்னுடன் இல்லாத இந்த நான்கு வருடங்களில் எத்தனையோ மாற்றங்கள். காதல் இன்னது என்று எனக்கு புரியவைத்த ஒருத்தியை என் மனம் தானாக விரும்ப தொடங்கிவிட்டது. இப்போது என் மனம் முழுவதும் நிறைந்திருப்பது அவள் மட்டுமே. அவள் பெயர் கவியரசி" என்று கூறிவிட்டு தேவியின் முகத்தை பார்த்தான் கண்ணன்.

0 comments:

Post a Comment