Thursday, December 19, 2013

என்னை விட்டு போகாதே...! பகுதி 48

அவளது முகம் வாடி போன மலர் போல் காட்சியளித்தது. அவள் விழிகளின் ஓரம் கண்ணீர் துளி தோன்றியிருந்தது. நிராகரித்தல் தருகின்ற வலியினை நன்கு உணர்ந்தவன் அவன். ஆனால் இன்று அவனே அந்த வலியினை அவளுக்கு தரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறான். இதுவும் வாழ்க்கையின் வினோதங்களில் ஒன்று தான்.

"உண்மையாக தான் சொல்கிறாயா கண்ணா?" அழுதபடி அவள் கேட்ட போது அவன் உடைந்து தான் போனான். என் செய்வது, இனியும் அவளிடம் இதை மறைப்பது தேவி கவி இருவருக்கும் அவன் செய்யும் துரோகமாக தோன்றியது அவனுள்.

"ஆம் தேவி. என்னை மன்னித்துவிடு. இது உன்னை எத்துனை அளவு காயப்படுத்தும் என்பதை நான் அறிவேன். ஆனால் உண்மை இது தான்" சொல்லிவிட்டு அவளை எதிர்கொள்ளும் தைரியம் இன்றி தனது தலையை தாழ்த்திகொண்டான் அவன்.

சில மணித்துளிகளுக்கு பேச மறந்து அழுகையை மட்டுமே தனக்கு சொந்தமாக்கி கொண்டாள் அவள். அவனால் அழுதிடவும் முடியவில்லை. மௌனமாகி போனான்.

"அவள் மீது நீ காதல் கொள்ள காரணம் நான் உன் மீது அன்பினை காட்ட மறந்து போனதன் விளைவா? இல்லை உன்னை நான் அதிகம் காயப்படுத்தியதற்கு நீ எனக்கு தரும் தண்டனை இந்த பிரிவா?" கேட்டாள் அவள்.

"இல்லை தேவி. உன் மீது எந்த வித வருத்தமும் இல்லை எனக்கு. உனது பிரிவால் துவண்டு போயிருந்த என் மனதிற்கு காதலின் அர்த்தம் சொல்லி தந்தவள் அவள். என் தாய் போல் அவள் என் மீது காட்டிய அன்பு மட்டுமே நான் அவள் மீது காதல் கொள்ள காரணம். அவளை அன்றி ஒரு பெண்ணை நான் மணப்பது என்பது சாத்தியம் ஆகாது" உறுதியாய் சொன்னான் அவன்.

எதையோ சிந்தித்தவளாய் "கண்ணா. உனக்கு அவள் தான் என்று நீ நினைத்தாள் அதை தடுப்பதற்கு நான் யார். உன் காதலை ஏற்க மறுத்த எனக்கு இந்த வலி வேண்டியது தான். கவியரசி கொடுத்து வைத்தவள்" என்றாள்.

அவளை பார்க்கும் துணிவு அவனிடம் இல்லை. அவள் அவன் அருகில் வந்து அவனை அணைத்து கொண்டாள். சில நிமிடங்களுக்கு அவன் தோள்களில் சாய்ந்து இருந்தவள் அவனை விட்டு விலகி சென்று "இது போதும் எனக்கு. என்னை பற்றி நீ கவலை கொள்ளாதே. கவியிடம் உன் காதலை சொல்லிவிட்டாயா?" கேட்டாள் அவள்.

ஏதோ ஒரு சுமையை இறக்கி வைத்து விட்ட உணர்வில் இருந்தவனை அந்த கேள்வி மீண்டும் சுயநினைவிற்கு கொண்டு வந்தது. "இல்லை தேவி. நாளை தான் சொல்ல போகிறேன்" என்றான் அவன். அவனது மனம் கவியின் மனதில் இருப்பதை அறியாதே.

0 comments:

Post a Comment