"என்ன தேவி ஏன் மௌனமாகி விட்டாய். நான் உன்னை காயப்படுத்தி விட்டேனா? என்னை மன்னித்துவிடு" என்றான் அவன்.
"அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை கண்ணா. சரி நீ உன் வேலையை கவனி" என்று சொன்னாள் அவள். அவளது குரலில் அழுகையின் ரேகைகள் இருப்பதை உணர்ந்தான் அவன். நமது மனம் சுமக்கும் சோகத்தை நமக்கு நெருக்கமான உறவுகளிடம் இருந்து மறைப்பது எளிதா என்ன.
அவளது மனதின் சோகத்தை அவன் வாசித்த அந்த நொடிகள் இருவரின் உதடுகளும் பேச மறுத்து ஊமையாகி போயிருந்தன தங்களுக்கு வேலை ஏதும் இல்லை என்பதை உணர்ந்து. கையிலே கைபேசி எந்த உரையாடாலும் இன்றி. அவளது அழுகை ஓசை மட்டும் அதிகரித்தவண்ணம் இருந்தது.
"கண்ணா. என் மீது உனக்கு ஏதேனும் கோபமா? நான் முன்பு உன்னை காயப்படுத்தியது உனது நினைவில் உள்ளதா? இருந்தால் என்னை மன்னித்து விடு. இப்படி விலகி சென்று என்னை தண்டிக்காதே" அழுதவளின் குரல் உடைந்து தான் போனது இந்த வார்த்தைகளை சொன்ன போது.
அவள் அழுவதை அவனால் ஏனோ தாங்கி கொள்ள முடியவில்லை. முதல் காதலை மறப்பது என்பது எளிதல்லவே. அவனை அவள் மதியாத போதிலும் அவளை அதிகம் நேசித்தவன் ஆயிற்றே அவன்.
"இல்லை தேவி. உன் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை" சொன்னவனின் மனம் தொடர்ந்தது "கோபம் எல்லாம் அந்த இயற்கையின் மீதும் என் மீதும் தான்" என்று.
அவள் மனம் ஏனோ அவனது பதிலில் நிம்மதி காணவில்லை "உண்மையாக தான் சொல்கிறாயா? எனக்காக ஏதும் சொல்ல வேண்டாம்" என்றாள் அவள்.
"உண்மையாக தான் சொல்கிறேன்" என்றான் எதையோ சிந்தித்தவனாய். சட்டென்று சொன்னான் " இன்று மாலை நாம் சந்திக்கலாமா. உனக்கு வேலை ஏதும் இல்லையென்றால்" என்று.



0 comments:
Post a Comment