பகுதி 38
அவளது இந்த வார்த்தைகள் அவனை தாக்கின. ஏனோ அவனது இதயம் வலிகளை மட்டுமே சந்திக்கும் ஒன்றாகி விட்டது சமீப காலமாய். தான் டெல்லிக்கு செல்ல மறுத்ததன் காரணமாய் இருப்பவளே அதை புரிந்து கொள்ளவில்லை எனில் அவனால் என்ன செய்ய முடியும்.
“இல்லை கவி.. நான் டெல்லிக்கு செல்லாததற்கு அவள் காரணம் அல்ல..” சொன்னான் அவன்.
“நான் தான் காரணம் என்று சொல். உன்னை விட்டு பிரிய முடியாமலே நான் டெல்லிக்கு செல்லாமல் இருந்தேன் என்று சொல்” என தன் ஆசைகளை எல்லாம் சத்தமின்றி வேண்டுதலாய் அவன் முன் வைத்தது அவளது இதயம்.
“அதன் காரணத்தை உன்னிடம் சொல்லிட வேண்டும் என்று தான் எண்ணி இருந்தேன். அதற்குள் ஏதேதோ நடந்து விட்டது. இப்போது அதை பற்றி உன்னிடம் பேசும் நிலையில் நான் இல்லை” அவன் குரலில் இருந்த வேதனையை அவள் அறியாமல் இல்லை.
“உன்னை வேதனை படுத்தும்படி ஏதேனும் சொல்லிவிட்டேனா? என்னை மன்னித்து விடு கண்ணா..” முதல் முறை இந்த மன்னிப்பு எனும் வார்த்தை தங்கள் இருவரின் உறவில் வருகிறது என்பதை உணர்ந்ததும் இருவரும் சற்றே கலக்கமுற்றனர், அந்த உறவின் தற்போதைய நிலை அறியாமல்.
“ஏன் இப்படி மன்னிப்பு எல்லாம் கேட்கிறாய்.. நமக்குள் இது என்ன புதிதாக?” மனதில் இருந்ததை கேட்டே விட்டான் அவன்.
“இல்லை கண்ணா. உன்னை வேதனை படுத்தியதை போன்ற உணர்வு. அது தான். சரி விடு. நாளை நான் வீட்டிற்கு செல்லலாம் என சொல்லிவிட்டார்கள். நான் காலையிலேயே புறப்படலாம் என்றிருக்கிறேன்” சொல்லிவிட்டு நிறுத்தினாள் அவள் அவனிடம் இருந்து பதிலை எதிர்பார்த்தபடி.
“சரி கவி. காலை நான் அங்கு வந்து விடுகிறேன். உன்னை கொண்டு உன் விடுதியில் விட்டுவிட்டு வருகிறேன்” அவள் எதிர்பார்த்த பதிலையே சொன்னான் அவன்.
இருந்தும் அவள் பெயருக்காக “பரவாயில்லை கண்ணா. நானே சென்று விடுகிறேன். உனக்கு எதற்கு வீண் சிரமம். நீ உன் வேலையை கவனி” என்றாள்.
“சிரமமா. என் தேவதையுடன் இருப்பதை விட வேறு என்ன வேலை இருக்கிறது எனக்கு” சொல்லிவிட்டு சிரித்தான் அவன். அவன் அவளை செல்லமாய் தேவதை என்றே அழைப்பது வழக்கம். அவளும் புன்னகைத்தாள். அவளை மேலும் பேச விடாமல் “நாளை நேரில் பேசலாம். ஓய்வு எடு” என்று சொல்லிவிட்டு அழைப்பை அணைத்தான்.



0 comments:
Post a Comment