Monday, December 16, 2013

என்னை விட்டு போகாதே...!!! பகுதி 43

அவள் அப்படி கேட்டதும் அவளை உடனே அங்கு அழைத்து சென்றிட வேண்டும் என்பது போல இருந்தது அவனுக்கு.ஆனால் அந்த உச்சி வெயிலில் அவளை அங்கு அழைத்து செல்வது அவள் உடலுக்கு நல்லதல்லவே. அது மட்டும் இன்றி இன்றைய ஒரு நாள் மட்டும் அதிகம் அலைச்சல் இன்றி அவள் ஓய்வு எடுக்க வேண்டும் என்பது மருத்துவரின் பரிந்துரை ஆயிற்றே.

மனதை கட்டுப்படுத்திக்கொண்டு சொன்னான் அவன் "இல்லை கவி. இன்று வேண்டாம். உனக்கு ஓய்வு தேவை. நாளை செல்லலாம்" என்று.

"ஏன் கண்ணா? இன்று உனக்கு முக்கியமான வேலை ஏதேனும் உள்ளதா. தேவியை காண போவதாய் சொல்லி இருக்கிறாயா?" கேட்டுவிட்டு தலையை திருப்பி கொண்டாள் அவள்.

அந்த வார்த்தைகள் அவனை வேதனை படுத்தியதில் ஐயம் ஏதும் இல்லையே. "இல்லை கவி. உன் உடல் நலனுக்காக தான் சொல்கிறேன். புரிந்து கொள்" என்றான் அவன்.

பெண்கள் எப்போதும் தங்களது மனதில் நினைப்பதே சரி என்று நினைப்பது வழக்கம். எத்தனை முறை விளக்கினாலும் அவர்கள் அந்த விளக்கத்தை ஏற்பதில்லை. அவளும் அதற்கு விதி விளக்கல்ல. அவன் எத்தனை முறை சொன்ன போதிலும் அவள் மனம் அங்கேயே நின்று விட்டிருந்தது.

"சரி கண்ணா. நாம் நாளை செல்லலாம், உனக்கு நாளையாவது எந்த வேலையும் இல்லாமலிருக்கும் என்று எண்ணுகிறேன்" சொல்லிவிட்டு அவனை பார்த்து புன்னகைத்துவிட்டு விடுதிக்குள் சென்றாள் அவள்.

இந்த பெண்களின் மனதில் இருப்பதை படிக்க தெரிந்தவனின் முகவரியை யாரேனும் கொடுத்தால் போதுமே,அந்த இடம் எங்கு இருப்பினும்  இந்த உலகில் உள்ள ஆண்கள் அனைவரும் அதை தேடி சென்று அவனிடம் அக்கலையை கற்றுவிட மாட்டனரோ.

அவனும் அந்த ஆண்கள் இனத்தில் ஒருவன் தானே. பாவம், அவனால் என்ன செய்ய முடியும் அவள் செல்வதை வேடிக்கை பார்ப்பதை தவிர. அவன் அங்கிருந்து விலகி செல்ல எத்தனித்த வேளை அவனது கைபேசி சிணுங்கியது. அது வெகு நேரமாய் சிணுங்கியபடி தான் இருந்தது தேவியின் பெயரை காட்டியபடி. கவியின் பேச்சில் இருந்து விலகிய அவனது மனம் இப்போது தான் அந்த கைப்பேசியின் சிணுங்களை கவனித்தது.

0 comments:

Post a Comment